திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் கைது
திருச்சி, ஆக.1: திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி, அரியமங்கலம், எஸ்ஐடி மயானம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு கடந்த 30ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி கதிர் (25), சபரிநாதன் (19), சிக்கந்தர் பாஷா (21) என்பதும், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விக்கி (19) மற்றும் தீபக் (19) ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.