தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 8ம்நாளில் திரு இருதய சபை அருட்சகோதரர்கள், பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி
தூத்துக்குடி, ஆக. 3:தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற, பஸிலிக்கா அந்தஸ்து பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443 ஆவது ஆண்டு திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இத்திருவிழா வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழா நாள்களில் உலக நன்மை, சமாதானம், மாணவ-மாணவிகளின் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும்.
இந்நிலையில், நேற்று 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடந்தது. காலை 6.30 மணிக்கு புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனையியல் கல்லூரி, புனித சார்லஸ் பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 7.30 மணிக்கு புனித யூதாதேயூ ஆலய பங்கு இறைமக்கள், கப்புச்சின் சபை துறவியர், திரு இருதய சபை அருள்சகோதரர்கள், புனித மரியன்னை மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. இதில் இறைமக்கள், துறவறத்தார், மாணவர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 8.30 மணிக்கு மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், புனித மரியன்னை கல்லூரி, புனித அலாய்சியஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 9.30 செயின்ட் தாமஸ் பள்ளிகள், செயின்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட திருப்பலி நடந்தது. இதில் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் திருப்பலி நடந்தது. பகல் 11 மணிக்கு ரீத்தம்மாள்புரம் பங்கு மக்களுக்கானதிருப்பலி பங்கு தந்தை அர்த்தநாசிஸ் ஜோ தலைமையில் நடந்தது. மாலை 5.30 பெண்கள் பணிக் குழுக்களுக்கான திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி நன்மைகள் செய்து வாழ என்ற தலைப்பில் கள்ளிகுளம் பனிமாதா மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை நிகழ்த்தினார்.
இன்று (3ம் தேதி) நற்கருணை பவனியும் வரும் 5ம் தேதியன்று அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான இறைமக்கள் தூத்துக்குடியில் கூடுவர் என்பதால் அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.