தூத்துக்குடி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடி, ஆக. 3:தூத்துக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கீதா
ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை சென்னையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை அரங்குகளில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டார். இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள். பழங்குடியினர் மற்றும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களில் நடத்தப்படுகிறது.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் தூத்துக்குடி யாழினி, கோவில்பட்டி வித்யா, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) பொன்ரவி, சுந்தரலிங்கம் (காசநோய்), யமுனா (தொழு நோய்) உட்பட அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.