அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்
ஓட்டப்பிடாரம், ஆக.2: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.45 மணிக்கு ஓட்டப்பிடாரம் தேரடி திடல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மோகன் முன்னிலையில் பெண்கள் முளைப்பாரி மற்றும் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சாலையோரம் நின்ற மக்களையும், கட்சிக்காரர்களை பார்த்து வணங்கினார். தொடர்ந்து பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். அதிமுக பாஜவுடன் சேர்ந்ததால் அவதூறு பரப்பி அரசியல் லாபம் தேடுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது.
நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலியை டெல்லி சென்று மக்களுக்காக பிரதமரிடம் பேசி பெற்றுத் தந்ததும் அதிமுக தான். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சொத்துக்களை இழந்த வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் நான் நின்று பேசுவது பெருமையாக உள்ளது. சட்டமன்ற வளாகத்தில் அவருக்கு முழு உருவச் சிலையும், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனாருக்கு முழுஉருவ வெண்கல சிலையும் அமைத்துக் கொடுத்தோம். மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனைவரையும் போற்றும் அரசாகவும் இருந்ததை அனைவரும் அறிவர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கான லேப்டாப், தாலிக்கு தங்கம் மற்றும் இதர திருமண உதவித் திட்டங்கள் என மக்கள் பயன் பெற்று வந்த பல நல்ல திட்டங்களால் பயனடைந்தவர்கள் ஏராளம். அதிமுக அரசு அமைந்ததும் மீண்டும் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நிதி வருவாய் எதுவும் கிடைக்கப்பெறாத கொரோனா காலகட்டத்திலேயே மக்களின் நிலை அறிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவியது அதிமுக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.