மின் கசிவால் தீ விபத்து முருங்கை மரங்கள் எரிந்து நாசம்
சாத்தான்குளம், ஜூலை 29: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தச்சன்விளையைச் சேர்ந்தவர் ஆல்வின். இவர் அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் முருங்கை விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே ஆடி மாதத்தை முன்னிட்டு காற்று பலமாக வீசி வருகிறது. இதேபோல் நேற்று மதியம் பலத்த காற்று வீசியபோது எதிர்பாராதவிதமாக மின் வயரில் இருந்து மின்சாரம் கசிந்ததில் அங்கு காய்ந்த நிலையில் இருந்துவந்த மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மேலும் பலமாக காற்று வீசியதில் அருகேயிருந்த முருங்கை மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. இவ்வாறு தீ மளமளவென எரிந்தது குறித்து திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். ஆனால், அதற்குள் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து நாசமாகி விட்டன. இவ்வாறு தீ விபத்தில் சேதமான முருங்கை மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கோரிக்ைக விடுத்துள்ளனர்.