புதிய பைப் லைனில் குடிநீர் விநியோகம்
தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடி சண்முகபுரத்தில் புதிய பைப் லைனில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சீராக குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு புதிய இணைப்பில் வழங்கப்படும் குடிநீரின் அளவை இரவு நேரத்தில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘புதிய குடிநீர் பைப் லைன் மூலம் தண்ணீர் வழங்கப்படும் பகுதிகளில் சில தடங்கல்கள் ஏற்படுவதால் அதனை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சண்முகபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகிப்பதில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்துள்ளோம். மாநகராட்சியில் 36 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதில், 29 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது. 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் ஒருநாள்விட்டு ஒருநாளும், 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், 10 வார்டுகளில் முதல்கட்டமாக 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
தினசரி 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும்போது பொதுமக்கள் குடிநீரை வீணாக பயன்படுத்துவதை தடுக்க டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படும்’’ என்றார். ஆய்வின்போது, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ், வட்ட பிரதிநிதி பாலரூபன், போல்பேட்டை பிரதிநிதி பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.