ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி சாவு
விளாத்திகுளம், ஜூலை 24: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மகன் பரமசிவன் (28). அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் முரளி (26), நாகராஜ் மகன் ஜெயராம் (25) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது பரமசிவன் நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவருடன் குளிக்க சென்ற முரளி மற்றும் ஜெயராம் ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் இருந்த பரமசிவத்தை உடனடியாக இருசக்கர வாகனத்தின் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தகவலறிந்த விளாத்திகுளம் போலீசார் விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.