கோர்ட்டில் ஆஜராக வந்த திமுக நிர்வாகியை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது
மன்னார்குடி, ஜூலை 26: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அகமது ஜும்மா (35). நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அடிதடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 17ஆம் தேதி காலை வீட்டிலிருந்து பைக்கில் வந்தார். அப்போது இவரது பைக்கை இரண்டு பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வேங்கைபுரம் அருகே வழிமறித்து கத்தியால் கையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது.இந்த தாக்குதல் குறித்து அகமது ஜும்மா மன்னார்குடி தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வழக்குப் பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறி தஞ்சை அடுத்த கல்விராயன்பேட்டை விஷால் (25), வல்லம் அடுத்த ஆலக்குடி வீரமணி (33) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்த தாலுகா போலீசார் அவர்களை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். மேலும், திமுக பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.