திருவாரூர் மாவட்டத்தில் புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 13,000 மாணவர்கள் பயன்
திருவாரூர் ஜூலை 25: திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அன்று முதல் தற்போது வரையில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஏழை, எளிய சாதாரண மாணவிகளின் கல்வி தரம் உயர கடந்த 2023ம் ஆண்டில் புதுமைபெண் திட்டமானது தமிழக முதல்வர் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டமானது, அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கக்கூடிய வகையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1000 வழங்கக்கூடிய மகத்தானதிட்டமாகும்.
பள்ளியில் படிக்கும் மகளிருக்கு கல்லூரி சென்றுபடிப்பதற்கு இத்திட்டமானது ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. மேலும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் வகையிலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் புதுமைபெண் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 14 கல்லூரிகளில் பயின்று மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த புதுமைபெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் இதனை ஏற்று அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததையடுத்து இந்த புதுமைபெண் திட்ட விரிவாக்கத்தினை கடந்தாண்டு டிசம்பர் 30ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இவ்வாறு 8 ஆயிரத்து 864 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் மாணவிகளை போன்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 54 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.புதுமைபெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 918 மாணவ, மாணவிகள் பயனடைந்த வரும் நிலையில் இதற்கு காரணமாக தமிழக முதல்வருக்கு மாணவ, மாணவிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.