மயிலாடும்பாறை அருகே மூலவைகையில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை
வருசநாடு, ஜூலை 31: மயிலாடும்பாறை ஊராட்சியில் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் மூல வைகை ஆறு செல்கிறது. இந்த மூல வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் புதிய தடுப்பு சுவர் கட்ட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மயிலாடும்பாறை விவசாயிகள் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் வந்தது. இதில் தடுப்புச் சுவர்கள் பலத்த சேதம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதனால் புதிய தடுப்பு சுவர் கட்டி பொது மக்களை காக்க வேண்டும். மேலும் விவசாய நிலங்கள் பாதிப்படையாமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.