சுருளி அருவி சாலையில் உள்ள குடிநீர் தொட்டி சுற்றுச்சுவர் சேதம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கூடலூர், ஜூலை 30: தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி அருகே, சுருளி அருவி சாலையில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியை சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சுவரின் நுழைவு வாயில் பகுதி சமீபத்தில் பெய்த கனமழையில் கம்பி கேட் உடன் இடிந்து விழுந்தது. இதனால் குடிநீர் தொட்டி பகுதிக்குள் எளிதில் நுழையலாம் என்ற நிலை உள்ளது. இதனால் சமூக விரோதிகள் குடிநீர் தொட்டி பகுதியை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை மீண்டும் கட்டி, குடிநீர் தொட்டியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.