சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
மூணாறு, ஆக. 2: கேரளா மாநிலம் மூணாறு அருகே தேவிகுளம் கேப் சாலையில் பைசன்வாலி பகுதியில் சாலை தடுப்பில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம், மூணாறுக்கு சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். தேனி-பூப்பாறை வழியாக வந்த இவர்கள் கேப் சாலையில் இருந்து பைசன்வாலி பகுதிக்கு செங்குத்தான இறக்கத்தில் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் காலை 11 மணி அளவில் சொக்கர்முடி பகுதியில் உள்ள செங்குத்தான மலை பகுதியில் இறங்கி சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த பாதுகாப்பு இரும்பு கம்பியை இடித்துக் கொண்டு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.