ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
கம்பம், ஆக 1: கம்பம் நகராட்சி கூட்டரங்கில் தமிழக மற்றும் கேரள சிவில் சப்ளை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் லதா, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி வினோதினி மற்றும் கேரள மாநிலம் குமுளி சப்-இன்ஸ்பெக்டர் ஜமாலுதீன்,பீர்மேடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மோகனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களையும் இரு மாநில போலீசாரும் சோதனை செய்ய வேண்டும். தலைசுமையாக ரேஷன் அரிசி கடத்துவோரை கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி மாவாக அரைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். அரிசி கடத்தல் வழக்கில் உள்ள நபர்களை தீவிர கண்காணிக்கப்பட வேண்டும் என்றனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளையும் பலப்படுத்துதல், தொலைபேசி எண்கள், சந்தேகப்படும் வாகனங்கள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுதல், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கூட்டாக சோதனை நடத்தும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்தல், ரேஷன் அரிசி போன்றவற்றை பெறுபவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநில எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர்.
எனவே, ரேஷன் அரிசி வாங்குபவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, அவர்களை கைது செய்ய தமிழ்நாடு போலீசாருக்கு கேரளா அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் தமிழக மற்றும் கேரள வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.