மூணாறு எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் பசு படுகாயம்
மூணாறு, ஆக. 1: மூணாறில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் தமிழர்கள் ஆவர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் இவர்களுக்கு சொற்ப வருமானமே கிடைப்பதால் தங்களுடைய இதர செலவிற்காக கறவை பசுக்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் புலியின் தாக்குதலில் பசுக்கள் கொல்லப்படுவது தொழிலாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பலரும் கால்நடை வளர்ப்பதில் இருந்து பின் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அருவிக்காடு எஸ்ட்டே டாப் டிவிசனில் சத்யா என்பவரின் மேய்ச்சலுக்கு சென்ற கறவை பசு மாட்டை புலி தாக்கியுள்ளது. பசுமாட்டின் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து புலி வனப்பகுதியில் ஓடி சென்று மறைந்தது. இதனால் கறவை பசு காயங்களுடன் உயிர் தப்பியது.
பின் கால்களில் பலத்த காயமடைந்த பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் புலியின் தாக்குதல் நடந்துள்ளது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் புலியைய் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் தீர்த்தமலை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.