கால்வாயில் விழுந்த பசு மாடு மீட்பு
வத்தலக்குண்டு, டிச. 5: வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று தனது மாடுகளை வைகை பாசன கால்வாய் அருகே கயிற்றால் கட்டி அருகிலிருந்த புல்லை மேய விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பசு மாடு கால் வழுக்கி தண்ணீர் ஓடி கொண்டிருந்த பாசன கால்வாயில் விழுந்தது. இதை கண்ட அருகில் இருந்த ஒருவர் உடனே, பசு மாட்டை தண்ணீர் இழுத்து செல்லாமல் கயிற்றை பிடித்து கொண்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இதுகுறித்து உடனே வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கடேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கால்வாயில் இறங்கி பசு மாட்டை மீட்டு உரிமையாளர் செல்வத்திடம் ஒப்படைத்தனர். பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு செல்வம் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.