அடிப்படை வசதிகளை மேம்படுத்தி யானைகெஜம் அருவி சுற்றுலாத்தலமாக மாறுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு
வருசநாடு, ஆக. 3: வருசநாடு அருகே உப்புத்துரை யானைகெஜம் அருவியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே உப்புத்துரையில் உள்ள யானைகெஜம் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் யானைகெஜம் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு இலவமரம், கொட்டைமுந்திரி, பீன்ஸ், அவரை, தக்காளி, கத்தரி, தென்னை மாதுளை, எலுமிச்சை, பூசணி, நெல்லி, வாழை உள்ளிட்டவற்றை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே யானைகெஜம் அருவியில் நீர்வரத்து இருக்கிறது. மீதமுள்ள நாட்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எனவே யானைக்கெஜம் அருவிப் பகுதியில் தடுப்பு சுவர் கட்டினால் இப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக இப்பகுதி விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் சாலைகள் அமைத்து யானைகெஜம் அருவியை சுற்றுலா தலமாக மாற்றினால், இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. எனவே இப்பிரச்னையில் கலெக்டர் சிறிது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உப்புத்துரை, ஆட்டுப்பாறை கிராம விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய மலைசார்ந்த பகுதியாகஉள்ளது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு யானைகெஜம் அருவியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இதுபோல் அமைத்தால் இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நிலத்தடி நீர் வாயிலாக பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் பயனடைவர். அவர்களின் பொருளாதார நிலை உயரும். அதேபோல், இப்பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவித்தால் ஏராளமானோர் வருகை தருவார்கள். இதன் வாயிலாக இந்த பகுதி வளர்ச்சி பெறும். இவை தவிர கடமலை-மயிலை ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு எப்போதும் குடிநீர் பஞ்சம் வராது. எனவே இது சம்பந்தமாக கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
தடுப்பணை கட்டப்படுமா?
யானைக் கெஜம் அருவியையொட்டியுள்ள ஆற்று பகுதியில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இதனை சுற்றியும் உப்புத்துறை ஆத்துக்காடு ஆட்டுபாறை, கோவில்பாறை, வாய்க்கால்பாறைபோன்ற பகுதிகள் வழியாக சென்று தங்கம்மாள்புரம் மூல வைகை ஆற்றில் இந்த தண்ணீர் கலக்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் தடுப்பணை கட்ட கோரி கடந்த 40 வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஆத்துக்காடு விவசாயிகள் கூறுகையில், ‘‘பல ஆண்டு காலமாக ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கோரி வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பாசன நீரால் பல ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.