கனரக வாகனம் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாப பலி
தேனி, ஆக. 3: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. அணைக்கு மேல் பகுதியில் பழங்குடியின மலை வாழ் மக்களுக்கு அரசின் சார்பாக வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை செய்வதற்காக லாரியில் கனரக வாகனம் நேற்று கொண்டு செல்லப்பட்டது. பணிகள் நடைபெற உள்ள இடத்தில் லாரியிலிருந்து கனரக வாகனத்தை கீழே இறக்கும் பணியினை ஹிட்டாச்சி வாகன ஓட்டுநர் மணிகண்டன் மேற்கொண்டார். அப்போது கனரக வாகனம் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மணிகண்டன் கனரக வாகனத்திற்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலே பலியானார். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தின் அடியில் சிக்கிய மணிகண்டனின் உடலை போராடி மீட்டனர். இதுகுறித்து பெரியகுளம் - தென்கரை போலீசார் டிரைவர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.