இரவு நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுகோள்
தேவாரம், ஜூலை 28: கோம்பை பகுதிகளில் கோம்பை, மேலசிந்தலை சேரி, பல்லவராயன்பட்டி பண்ணைப்புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் இருந்தும் இரவு 10 மணிக்கு மேல், அரசு பஸ்களோ, தனியார் பஸ் சேவைகளோ இல்லை. அரசு பஸ்கள் காலையில் இருந்து, இரவு வரை உத்தமபாளையம், போடி, கம்பம், என முக்கிய ஊர்களுக்கு செல்கிறது. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சில் அதிகளவில் வருகின்றனர்.
அதேநேரத்தில் கோம்பை மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் இருந்து, இரவு நேரங்களில் எந்த பஸ்களும் இல்லாத நிலையில், தீவுகளாக மாறி விடுகின்றன. இதனால் ஆட்டோக்களில் ஏறி, உத்தமபாளையம், கம்பம் செல்ல வேண்டும். குறிப்பாக தொலைதூர ஊர்களாக உள்ள மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் செல்ல பாளையம் வருவதற்கு, கோம்பையில் இருந்து, தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வர வேண்டி உள்ளது. எனவே இரவிலும் பஸ்கள் சேவை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.