தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேனி, ஜூலை 24: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு, நில தகராறில் தடுப்புச் சுவர்கள் மற்றும் புதிய கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் ஒரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தேனி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை போலீசார் ரத்து செய்யும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்கறிஞர்கள் அறிவித்து நேற்று நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் செயலாளர் செல்வகுமார் உட்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.