வீரபாண்டியில் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு
தேனி, ஜூலை 28: தேனி அருகே வீரபாண்டியில் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். தேனி அருகே வீரபாண்டியில் இருந்து சீப்பாலக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி இச்சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, பாலங்கள், சாலை சந்திப்புகள், தடுப்புச் சுவர் அமையும் இடங்களில் ஆய்வு செய்து, பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள், குடிநீர் குழாய்கள் மற்றும் மரங்களை விரைந்து அப்புறப்படுத்தி பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், உதவிகோட்ட பொறியாளர் திருக்குமரன், உதவிபொறியாளர், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.