நீர்வரத்து சீரானதால் 4 நாட்களுக்கு பிறகு மேகமலை அருவியில் குளிக்க அனுமதி
வருசநாடு, ஜூலை 24: வருசநாடு அருகே, மேகமலை அருவியில் நீர்வரத்து சீரானதால் 4 நாட்களுக்கு பிறகு, குளிக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. வருசநாடு அருகே, கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேகமலை அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இரவங்கலாறு, உடங்கல் ஆறு உள்ளிட்ட மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்ததால் அருவிக்கு கடந்த 19ம் தேதி நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருவிக்கு நீர்வரத்து சீரடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு வந்து காத்திருந்த பயணிகள் உற்சாகமாக குளித்தனர். அப்போது சாரல் மழை பொழிந்ததால் உற்சாகமடைந்தனர்.