சின்னமனூர் அருகே வாழைத்தார் திருட்டு 2 பேர் சிக்கினர்
சின்னமனூர், ஜூலை 24: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், சில மர்ம நபர்கள் வாழைத்தார்களை பறித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதைப் பார்த்து சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் வாகனத்தில் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு அவர்களை மடக்கினர். சரக்கு வாகனத்தில் 3 பேர் இருந்த நிலையில் ஒருவர் திடீரென குதித்து அங்கிருந்து தப்பி ஓடினார். மற்ற 2 பேரை பிடித்து வாகனத்துடன் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் அக்கம்பக்கத்தினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.