கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராமங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தஞ்சாவூர், ஆக. 2: கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேளாண் பொறியியல் துறை சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை 27 கிராமங்கள் கொள்ளிடம் கரையோர பகுதியில் இருக்கிறது.
தண்ணீர் திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணியை செய்திருக்கிறோம். அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல், வழங்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவையும் நாம் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றோம். பொதுமக்களை மீட்க கூடிய பேரிடர் மேலாண்மை உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தண்ணீரின் அளவு அதிகமாகும் போது பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள இருக்கிறோம்.
வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை என அனைத்து துறையின் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடைமடை வரை வேகமாக தண்ணீர் சென்று இருக்கிறது. உரிய காலத்தில் தண்ணீரை திறந்து இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.