விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டத்தால் களைகட்டிய தஞ்சை பெரிய கோவில்
தஞ்சாவூர், ஜூலை 28: மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெரிய கோவிலுக்கு காலை முதல் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.
குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்கு சாலையை கடந்து சென்றபோது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெரிய கோவிலுக்கு வழக்கத்தைவிட நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் தஞ்சை ராஜராஜ சோழன் மணிமண்டபம், ராஜப்பா பூங்கா, அரண்மனை, சரஸ்வதி மகால், அருங்காட்சியம், ராஜாளிக் கிளி பூங்கா, உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. பகலை விட மாலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
ராஜப்பா பூங்காவிற்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் நவீன பொழுதுபோக்கு மையத்தினை பார்த்து ரசித்தனர். அவர்கள் தங்களது குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்ந்தனர். ஊஞ்சல், சீசா போன்ற விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்-சிறுமிகள் ஆர்வமாக விளையாடினார்கள். வயதானவர்களும் நடைபயிற்சி மேற்கொண்டும், மரத்துக்கு அடியில் அமர்ந்து நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசியும் பொழுதை கழித்தனர்.