தண்ணீரில் மூழ்கி பலி
பேராவூரணி, ஆக. 4: திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபர் பேராவூரணி அருகே சடலமாக மீட்கப்பட்டார்.திருவோணம் தாலுக்கா புகழ் சில்லத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்செல்வம் மகன் கார்த்தி (20) இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன் வெட்டிக்காடு ஆற்றுக்கு குளிக்கச் சென்றவர் ஆற்று சுழலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை .பேராவூரணி தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வெட்டிக்காடு ஆற்றுப்பகுதியில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பேராவூரணி அருகே பட்டத்தூரணி கல்லனை கால்வாய் கிளை வாய்க்காலில் சடலம் ஒன்று மிதப்பதாக பேராவூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை செய்தபோது, வெட்டிக்காடு ஆற்றுக்கு குளிக்கச் சென்று காணமல் போன கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.