தஞ்சையில் சர்வதேச சதுரங்க போட்டி
தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சையில் உள்ள கமலா - சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளியில் விமான சிட்டி மற்றும் கோல்டன் - ஸ்கொயர் சதுரங்க அகாடமி சர்பில் உலக அளவிலான செஸ் போட்டி 4 நாட்கள் நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் இணை செயலாளர் ரமேஷ், தெற்கு ரெயில்வே சர்வதேச மாஸ்டர் நித்தின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பள்ளி முதல்வர் மதியரசி, பேராசிரியர் பழனியப்பன், விளையாட்டு அதிகாரி சண்முகராஜன், தமிழ்நாடு இணை செயலாளர் செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து மற்றும் பல்வேறு நாடுகள் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 446 பேர் கலந்து கொண்டனர். போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 1 மதிப்பிலான பரிசு தொகையும், 4 லேப்டாப், 68 கோப்பைகள், 50 மெடல்கள், 10 சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகர் துரை.சுதாகர் பரிசுகளை வழங்கி பேசினார். இதில் ஆடிட்டர் ராஜாங்கம் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செஸ் கழக தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.