பேராசியர் அன்பழகன் விருது பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு
பேராவூரணி, ஜூலை 8: பேராசிரியர் அன்பழகன் விருது பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் பள்ளிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 2024-25 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இந்த விருதை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். விருது பெற்றதற்கான பாராட்டு விழா எம்எல்ஏ அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பேராசியர் அன்பழகன் விருதுபெற காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா விருதை காட்டி வாழ்த்துப்பெற்றார். நிகழ்ச்சியில், முன்னாள் தலைமையாசிரியர் தனலெட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுபசேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் சத்தியசீலன், உதவி தலைமை ஆசிரியர்கள் காளீஸ்வரி, புவனேஸ்வரி, லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.