காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 28: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை எந்தநேரத்திலும் திறந்து விடப்படலாம். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும், வெள்ள அபாய எச்சரிக்கையும் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுகொள்ளளவில் விடுக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அதன்படி ஆற்றுக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுபாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் நீர்நிலைப்பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம்.
அபாயகரமான இடங்களிலும் தன்படம் (Selfie) எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்த்திட வேண்டும். ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும், குளிக்கச் செல்லும்போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர் வரத்து உள்ளதால், அந்தப்பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்த்திடல் வேண்டும். கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.