தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இறுதி கட்ட பணிகள் தீவிரம்
தஞ்சாவூர், ஜூலை 25: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.38 லட்சம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்குகிறது. இந்த மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதி என அழைக்கப்படுகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது.
இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா 13 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறுவை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது இறுதி கட்ட நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை தஞ்சை மாவட் டத்தில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால் இலக்கை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுவை சாகுபடிக்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அவ்வப்போது உரங்கள் சரக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கிறது. யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஸ் உரங்கள் சாகுபடிக்கு தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் விற்பனை நிலையங்களில் விதை நெல்கள் மற்றும் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கோடை சாகுபடி அறுவடை பணிகளும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்கள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.மேலும் அரவைக்கு பின் நெல்கள் மீண்டும் தஞ்சையில் உள்ள சேமிப்பு இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்திற்கும், சரக்கு ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் கோடை அறுவடை பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.