குளத்தில் மிரட்டும் மின்கம்பம்
தொண்டி, டிச.9: தொண்டியில் குளத்தின் நடுவில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி அன்பாலையா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எதிராக சின்ன தொண்டி செல்லும் வழியில் உள்ள குளத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது தொடர் மழையால் குளம் நிரம்பி உள்ளதால் அதிகமானோர் குளிக்கின்றனர்.
இந்த நேரத்தில் மின்கம்பம் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். அதனால் மின்வாரியத்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் குளம் நிரம்பியது போல் மின் கம்பமும் சாய்ந்துள்ளது. தண்ணீரில் நிற்பதால் ஆபத்து எதுவும் நடக்கும் முன்பு சரி செய்ய வேண்டும் என்றனர்.