திருப்புத்தூரில் கார்த்திகை விளக்குகள் விற்பனை ஜோர்
திருப்புத்தூர், டிச.3: திருப்புத்தூரில் கார்த்திகை தீபசட்டி விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
கடந்த நவ.17ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. இன்று திருகார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், சிலர் கார்த்திகை மாதம் பிறந்த முதல்நாளே வீட்டில் கார்த்திகை விளக்கில் தீபம் ஏற்றினர். இந்நிலையில், நாடு முழுவதும் திருகார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும், கடைகளிலும் தீபம் ஏற்றுவார்கள்.
இந்நிலையில் இன்று கார்த்திகை திருநாள் கொண்டாடப்படவுள்ளதால், திருப்புத்தூர் காந்தி சிலை அருகில் மற்றும் அனுமார் கோவில் சந்து, மதுரை ரோடு, அண்ணா சிலை, நான்கு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மண்களால் செய்யப்பட்ட பலவிதமான கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பெண்கள் ஆர்வமுடன் நேற்று வாங்கி சென்றனர். சிறிய விளக்குகள் பத்து ரூபாய்க்கு 10, 7, 5, 2 வீதம் எனவும், ஐந்து முகங்கள் கொண்ட உயரம் மற்றும் செய்யப்பட்ட விதத்திற்கு தகுந்தார்போல் விலைகள் வைத்து வியாபாரிகள் கார்த்திகை விளக்குகளை விற்பனை செய்தனர்.