பொன்னமராவதி அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவர் சாதனை
பொன்னமராவதி, ஆக. 1: பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கன் மகன் சரவணன். இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 560 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
இதையடுத்து நீட் தேர்விற்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார். சரவணன் நீட்தேர்வில் தேர்வு பெற்று 7.5சதவீத உள் ஒதுக்கீட்டில் சென்னை மதுராந்தகம் கற்பகவிநாயக மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. மருத்துவக்கல்லூரியில் பயில தேர்வு பெற்றுள்ள சரவணனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.