திருமயத்தில் இன்று நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
திருமயம், ஆக.2: திருமயத்தில் இன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் வகையில் மக்களின் தேவை அறிந்து அனைத்து வசதிகளும் தங்கு தடை இன்றி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கே சென்று கிடைத்திட பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை இன்று (2ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவங்கி வைக்க உள்ளார். அது சமயம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் அருணா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இங்கு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், மகேப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கிட உள்ளது. எனவே திருமயம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.