லாடபுரம் ஆதிதிராவிடர் நல பள்ளியில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்
பெரம்பலூர், ஜூலை 26: விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பது என லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று (25ம் தேதி) மாலை பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் இந்திராணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாநில கற்றல் அடைவு ஆய்வு மற்றும் திறன், எண்ணும் எழுத்தும் திட்ட செயல் பாடுகளின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தல், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, உள்ளடக்கிய கல்வியின் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பற்றி எடுத்துரைத்தல், அனைத்து குழந்தைகளும் பள்ளியில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை முறையான வகுப்பில் சேர்த்தல், நம்ம ஊரு பள்ளி, பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தேவைகள் குறித்தும், 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்குதல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , உதவி எண்கள் (14417 மற்றும் 1098) பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் விளக்கிப் பேசினார்.
மேலும், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பது, வாழ்வியல் திறன்களை மேம்படுத்துதல், அதற்கென பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து விவாதித்தல், மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் - சேமிப்பு செய்தல் ஊக்குவித்தல், மணற்கேணி செயலி -தூதுவர்கள் அறிமுகம், ”என் பள்ளி, என் பெருமை”எனும் தலைப்பில் முன்னாள் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டு, பெற்றோர்கள் கலந்துரையாடல் செய்தனர். தமிழாசிரியர் செல்வராணி வரவேற்றார். அருணா நன்றி கூறினார்.