பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
பெரம்பலூர்,ஜூலை.28: பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81வது ஆண்டு திருத்தலப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஆக.4ம்தேதி தேர்பவனி நடைபெறுகிறது. பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள, புனித பனிமயமாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டு பெருவிழா, வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி நேற்று (27 ஆம்தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றம் நடை பெற்றது.
பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குருவும், பங்கு குருவுமான சுவக்கின் தலைமையில் நடைபெற்ற விழாவில், கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் பேரருள்திரு அந்தோணி ஜோசப் கலந்து கொண்டு திருவிழா கொடியை புனிதப் படுத்தி ஏற்றி வைத்தார். முன்னதாக சப்பர பவனி நடைபெறும் தெருக்களில் கொடி பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னை மரியாள் முதல் சீடர் என்ற தலைப்பில் மறையுரையுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் அருட்சகோதரர் எட்வின், பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் மற்றும் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித பாத்திமா தொடக்கப்பள்ளி, ஹோலி கிராஸ் மருத்துவ மனை அருட்சகோதரிகள், அன்பியம் குழுவினர், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர், கத்தோலிக்க சங்கத்தினர், தூய வின்சென்ட் தே பவுல் சபையினர், இளைஞர் மன்றத் தினர் என பெரம்பலூர் மற்றும் பாளையம், எளம்பலூர், ரெங்க நாதபுரம், கவுள் பாளையம்,
சத்திரமனை, புது நடுவலூர், மைக்கேல்பட்டி, வரதராஜன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு பங்கு குருக்கள் தலைமையில் மறையுரையுடன் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு வருகிற ஆக.4ம் தேதி இரவு 8மணிக்கு அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது. 5ம் தேதி காலை திருவிழா நன்றி திருப்பலி நடைபெறுகிறது.