62ம் ஆண்டு பெருவிழா தேர் பவனி
ஜெயங்கொண்டம், ஆக.3: ஜெயங்கொண்டத்தில் பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் துவங்கி தேர் பவனி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், குடந்தை மறை மாவட்டம் ஜெயங்கொண்டம் மறை வட்டம் நகரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலய 62 ஆம் ஆண்டு பெருவிழா திருப்பலியுடன் துவங்கி தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றன. இவ்விழாவிற்கு ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். திருப்பலி நிகழ்ச்சிக்கு கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு கோஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் ஜெயங்கொண்டம் மறை வட்ட குருக்கள் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து ஆடம்பர தேர் பவனி பாடல் குழுவினர்களின் பாடல்களுடன் பேருந்து நிலையம் சாலை, அண்ணா சிலை, கடைவீதி, 4 ரோடு வழியாக வலம் வந்து ஆலயத்திற்கு சென்று தேர் பவனி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாத்திமா அன்னை இல்ல அருட் சகோதரிகள் திருப்பலி நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர் திருப்பலி நிகழ்ச்சியில் சூரிய மணல், சூசையப்பர் பட்டினம், விழப் பள்ளம், வட வீக்கம், மைக்கேல் பட்டி, உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வியாகுலம் மற்றும் பங்குத்தந்தை அருட் சகோதரிகள் பங்கு மேய்ப்பு பணி பேரவை பக்த சபைகள் அன்பியங்கள் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.