இருசக்கர வாகனங்கள், கார்களில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்
பெரம்பலூர், ஜூலை 25: இருசக்கர வாகனங்கள், கார்களில்ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுகூட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், நேற்று (24ம் தேதி) வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளின் அடிப்படையில், அப்பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும், அந்த நடவடிக்கைகளுக்கு பிறகு விபத்துகள் நடப்பது குறைந்துள்ளதா என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.
மேலும், அதிக விபத்து நடை பெறும் இடங்களில், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக செய்து முடித்து, அது குறித்த விபரங்களை ஒருவார காலத்திற்குள் அறிக்கை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும்பாலான சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் சென்று உயிரிழந்தவர்கள் தலைப் பகுதி பாதிக்கப்பட்டு ஹெல்மெட் அணியாமல் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதை தவிர்த்திடும் வகையில் ஹெல்மெட் அணிவதும், கார்களில் செல்வோர் கட்டாயம் ஷீட்பெல்ட் அணிவதை போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு போதிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார். பின்னர் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு ஏற்படக்கூடிய பகுதிகள், புதிதாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதேனும் இருப்பின் ஆரம்ப நிலையிலேயே வருவாய்த் துறை அலுவலர்களும், காவல் துறையினரும் இணைந்து அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். நில அபகரிப்பு புகார், கோயில் மானிய நிலம் மற்றும் கோயில் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு காவல் துறையினர் தொடர்புடைய அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை பேணி காத்திட வேண்டும். கிராமங்களில் மதம், இனம், தொடர்பாக பிரச்னைகள் ஏற்படும் இடங்களில் இருதரப்பினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உடனுக்குடன் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ, நேஷனல் ஹைவே டிராபிக் இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சத்தியமூர்த்தி, அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.