ஆடி அமாவாசை சிறுவாச்சூர் மதுர காளியம்மன் உள்பட அம்மன்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
பெரம்பலூர், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்மன் வழி பாட்டுத் தலமான சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கண்ணகியின் சினம் தணித்த ஸ்தலமாகக் கருதப்படும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் ஸ்ரீ ஆதிசங்கர் வழிபாடு செய்த பெருமை கொண்டதாகும். வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், அமாவாசை, புத்தாண்டு மற்றும் பண்டிகை நாட்களிலும் மட்டுமே நடை திறக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தங்கத்தேர் உள்ளது.
இக்கோயிலில் நேற்று (24ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர். சிறுவாச்சூர் மற்றும் அயிலூர், மருதடி, விளாமுத்தூர், செல்லியம்பாளையம், நொச்சியம், அரணாரை, நாரணமங்கலம் உள்பட பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்களும், குலதெய்வ வழி பாட்டாளர்களும் காலை முதல் மாலை வரை ஆயிரக் கணக்கானோர் திரண்டுவந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
அதேபோல் பெரம்பலூர் நகரில் பூசாரித் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பக்தர்கள் சார்பாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் மஹா மாரியம்மன் கோயிலிலும், அரணாரை அருகே உள்ள நீலி அம்மன், செல்லியம்மன் கோயில்களிலும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், செல்லியம்மன், நீலியம்மன், கோயில்களில், சிவாலயங்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.