குடியிருப்புகளில் சூரியஒளி மின்சக்திபேனல் நிறுவ விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்
பெரம்பலூர், ஜூலை 25: பெரம்பலூர் மாவட்டத்தில் சூரியகர், சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவ ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டக் கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய அரசால் தொடங்கப் பட்டுள்ள சூரியகர் சூரிய ஒளி மின் திட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் குடியிருப்புகளில் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவுவதால், வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் யூனிட்களை மின் உபயோகத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மத்தியஅரசின் உள் கட்டமைப்பு மானியம் கிடைக்கும். மின்சார கட்டணத்தில் அதிக அளவிலான சேமிப்பு கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, பசுமை ஆற்றல் உற்பத்தியில் பொதுமக்களும் இணைந்து பங்காற்ற முடியும்.
ஆர்வமுள்ள பொதுமக்கள் < https://pmsuryaghar.gov.in/ > என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, சூரிய ஒளி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 1 KW சோலார் பேனல் அமைத்தால், ரூ.30,000 மானியமும், 2 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ.60,000 மானியமும், 3 KW அல்லது அதற்கு மேல் சோலார் பேனல் அமைத்தால் ரூ.78,000 மானியமும் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள மின்சார அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.