வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதித்த ஊட்டி ரோஜா
ஊட்டி, ஜூலை 25: ஊட்டியில் ரோஜா பூங்காவில் பல வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ரோஜா செடிகள் உள்ளன.
மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள்.
ரோஜா பூங்காவில் தற்போது பல வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காற்று மற்றும் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மாறுபட்ட காலநிலைகளால் ரோஜா மொட்டுகள் மற்றும் மலர்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு வெள்ளை நிறத்தில் பாதித்து வாடியுள்ளன. வெயிலான காலநிலை நிலவும் பட்சத்தில் சரியாக வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.