ஊட்டியில் மீண்டும் சாரல் மழை
ஊட்டி, ஜூலை 30: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 17ம் தேதியில் இருந்து முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று வீசுவதால் மரங்கள் விழுதல், மின்துண்டிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.
மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. கடும் குளிர் நிலவுவதால் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி அறுவடை பணிகளுக்கு செல்ல கூடிய தொழிலாளர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மழை காரணமாக குழந்தைகள், பொியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த இரு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாறாக பலத்த காற்று மட்டும் வீசி வந்தது. இந்நிலையில் ஊட்டியில் நேற்று மாலை முதல் மீண்டும் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் அதிகரித்துள்ளது.