முதுமலை காப்பகத்தில் சர்வதேச புலிகள் தினவிழா
கூடலூர், ஜூலை 30: சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கார்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொரப்பள்ளி, தெப்பக்காடு வனச்சரக ஓய்வுவிடுதி, நெலாக்கோட்டை வனச்சரகம், அள்ளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் உள்நாட்டு மர வகைகள் நடவு செய்யப்பட்டது.
தொரப்பள்ளி, பாட்டவயல் கக்கநல்லா சோதனைச்சாவடிகள், தெப்பக்காடு சுற்றுலா பகுதி, தெப்பக்காடு யானைகள் முகாம், போஸ்பாரா மற்றும் முக்குருத்தி தேசிய பூங்கா வேட்டை தடுப்பு முகாம் பகுதிகளில் சுற்றுலாபயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விட்டுச்சென்ற நெகிழிப் பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சோதனைசாவடிகளில் வாகனங்களில் வருபவர்களிடம் சோதனை செய்து அவர்கள் எடுத்து வந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தொரப்பள்ளி கக்கனல்லா சோதனைசாவடி பகுதிகளில் புலி முகத்துடன் கூடிய முகமூடிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட பள்ளி மற்றும் அல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் புலிகள் பாதுகாப்பு குறித்த உரையாற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.