சமையல் எரிவாயு நுகர்வோர் காலாண்டு கூட்டம்
ஊட்டி, ஆக.1: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு சமையல் எரிவாயு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். நுகர்வோரின் வீடுகளுக்கு வினியோகிக்க வேண்டும். நுகர்வோருக்கு பில் கட்டாயம் வழங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கு அருகில் உள்ள முகவர்கள் வாயிலாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.