தேவாலா தனியார் தார் கலவை உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
பந்தலூர், ஆக.2: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தார் கலவை ஆலையின் மதில் சுவர் கடந்த 28ம் தேதி இடிந்து விழுந்து அருகே உள்ள வீடுகள் சேதமானது. இதனால் அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்து வந்த மதில் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்படும் என புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேவாலா பஜாரில் அரசியல் கட்சிகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் சத்திவேல் தார் கலவை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேவாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த தார் கலவை உரிமையாளரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தார் கலவை ஆலை உரிமையாளர் ராயின் பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.