காட்டேரி அருவியில் வெள்ள பெருக்கு: வெள்ளி இழை போல் காட்சியளிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிப்பு
ஊட்டி, ஜூலை 29: ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அருவியில் வெள்ளி இழைகள் போல் மலையில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து விழும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், மழைக் காலங்களில் பல இடங்களில் மலைகளின் மீது இருந்து பள்ளங்களை நோக்கி விழும் அருவிகளையும், நீர் வீழ்ச்சிகளையும் காண முடியும். சில அருவிளில் பாறைகளின் மீது தண்ணீர் பாய்வது தொலைவில் இருந்து பார்த்தால், வெள்ளி இழைகள் போன்று காட்சியளிக்கும். இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். மேலும், புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கேத்தி பாலாடா பகுதியிலும் மழை பெய்த நிலையில், தற்போது காட்டேரி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள காட்டேரி மலையின் உச்சியில் இருந்து பாறைகளின் வழியாக தாழ்வான பகுதிக்கு செல்கிறது. இந்த தண்ணீர் பாறைகளின் மீது விழுவது, தொலைவில் இருந்து பார்த்தால் வெள்ளி இழைகள் போல் காட்சியளிக்கிறது. தற்போது மஞ்சூர் மற்றும் ஊட்டிக்கு காட்டேரி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.