மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளரின் வாரிசுதாரருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் நல வாரிய நிதியுதவி
ஊட்டி, ஜூலை 29: பணியிடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற, தொழிலாளர் ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான நிதியுதவியை கலெக்டர் வழங்கினார். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 132 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இக்கூட்டத்தில், பணியிடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற, தொழிலாளர் ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரரான ஈஸ்வரி என்பவருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான ஆணை, தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கவும், வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் 4 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் (தலா ரூ.1 லட்சம் மானியம்) புதிய ஆட்டோ வாகனத்திற்கான சாவிகள் மற்றும் நிர்வாக அனுமதி ஆணைகளையும் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கண்ணன், பழனிச்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.