தொடர் மழை காரணமாக மாயார் அணை நீர்மட்டம் உயர்வு
ஊட்டி, ஜூலை 24: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணை, கிளன்மார்கன் நீர்தேக்கம் மற்றும் வனப்பகுதிகளில் உருவாகும் நீரோடைகளில் உற்பத்தியாக கூடிய நீர் சுரங்கப்பாதை வழியாக சிங்காரா மின் நிலையத்திற்கு செல்கிறது. அங்கு மின் உற்பத்தி செய்யப்பட்ட பின் மரவக்கண்டி அணைக்கு செல்லும் நீரை பயன்படுத்தி அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின் இறுதியாக மாயார் அணைக்கு அங்கு கீழ்புறம் உள்ள குந்தா நீர்மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்பட்ட மாயார் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும்.
மின் உற்பத்தி செய்யப்பட்ட பின் தெங்குமரஹாடா வழியாக பவானிசாகர் அணையில் கலக்கும். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை நிலையில், பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பைக்காரா அணையில் இருந்து உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் மரவக்கண்டி மற்றும் மாயார் அணைகளில் நிரம்பியுள்ளது. மாயார் அணையில் மொத்த கொள்ளளவான 17 அடியில் 15 அடிக்கும் மேல் நீர் இருப்பு உள்ளது.