நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை நீலகிரியில் மரங்கள், பாறை சரிவு
ஊட்டி, ஜூலை 28: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை குறைந்து காணப்பட்ட நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் 260 மிமீ., மழை பதிவானது. சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையில் விழுந்த மரம், மேல்கௌஹட்டி சாலையில் விழுந்த பாறை அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே இறுதி வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. துவக்கத்தில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது.
அதன் பின் மழை சற்று குறைந்து விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 17ம் தேதியில் இருந்து முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று வீசுவதால் மரங்கள் விழுதல், மின் துண்டிப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட்டு வருகின்றன. சாலைகளில் விழ கூடிய மரங்களை தீயணைப்பு, ெநடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றி சீரமைத்து வருகின்றனர். மின் துண்டிப்புகளை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கு கிராமப்புற சாலைகளில் மரக்கிளைகள் விழுவது வாடிக்கையாக உள்ளது. நேற்று நள்ளிரவில் பலத்த காற்று வீசிய நிலையில் அதிகாலை முதல் ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை குறைந்து காணப்பட்டது. அவ்வப்போது மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. அதே சமயம் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் கடும் குளிர் நிலவுவதால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. சில சுற்றுலா பயணிகள் மழையின் நனைந்த படி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக நேற்றும் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள தொட்டபெட்டா சிகரம், பைன்பாரஸ்ட், 8வது மைல் டிரீ பார்க் ஆகியவை நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.
கடும் குளிர் நிலவுவதால் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி அறுவடை பணிகளுக்கு செல்ல கூடிய தொழிலாளர் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழை காரணமாக குழந்தைகள், பெரியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடும் குளிர் நிலவி வருவதால் மழை ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நேற்று காலை ஊட்டி - கூடலூர் சாலையில் சூட்டிங்மட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த கற்பூர மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஊட்டி அருகே மேல்கௌஹட்டி கிராமத்திற்கு செல்ல கூடிய சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையை பொக்லைன் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனை தொடர்்ந்து அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று முன்தினம் கிண்ணக்கொரை பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): அவலாஞ்சி 260, அப்பர்பவானி 185. நடுவட்டம் 163, பார்சன்ஸ்வேலி 145, கூடலூர் 63 என மொத்தம் 1564 மிமீ., மழை பதிவாகி உள்ளது.
நேற்றைய தினம் மழை குறைந்து காணப்பட்டாலும், மழை பொழிவு நீடித்து வரும் நிலையில் பாதிப்புகளை சமாளிக்கும் பொருட்டு அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.