பலா மரங்களை முற்றுகையிட்ட யானைக்கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை
குன்னூர், ஜூலை 24: குன்னூரில் பலா சீசன் துவங்கியுள்ளதால் பழங்களை தேடி பழங்குடியின குடியிருப்பு அருகே குட்டியுடன் வந்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பசுமை போர்வை போர்த்தியதுபோன்று செடி, கொடி, மரம், புற்கள் முளைத்துள்ளன.குன்னூர் பகுதிகளில் கோரை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது. இது தவிர வாழை, பலா மரங்கள் காய்த்து தொங்குகின்றன.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு, குடிநீர் தேடி குட்டியுடன் 7 காட்டுயானைக்கூட்டம் இங்கு படையெடுத்துள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள இந்த யானைக்கூட்டம் அருகில் உள்ள பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்றது. அந்த மக்கள் யானைகளுக்கு தொல்லை கொடுக்காமல் ஒதுங்கிச்சென்றனர். இந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கூட்டம் வாழை, பலா மரங்களை முற்றுகையிட்டு பழங்களை ருசித்து வருகின்றன.