கூடலூர் அருகே மாடுகளை வேட்டையாடும் புலியை பிடிக்க மயக்க ஊசி ஒலி பெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை
கூடலூர், ஜூலை 28: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பாடந்துறை. இங்குள்ள சர்க்கார் மூலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அசைனார் என்பவரின் எருமை மாட்டை புலி தாக்கி கொன்றது. சனிக்கிழமை கிருஷ்ணன் என்பவரது மாட்டை அடித்துக்கொன்றது. வனத்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் புதியதாக கண்காணிப்பு கேமரா பொருத்தி புலியை தேடி வருகிறார்கள்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: ஏற்கனவே வைத்த கேமிரா காட்சிகளில் புலியின் நடமாட்டம் உள்ளதா? என்பதனையும் ஆராய்ந்து வருகிறோம்.
கால்நடைகளை வேட்டையாடியது ஒரே புலி தானா? புலி வேட்டையாட முடியாத அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா? முதுமலை புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புலிகளின் அடையாளத்துடன் இந்த புலி ஒத்துப்போகிறதா? என்பதை உறுதி செய்து புலியின் வயது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே புலியை கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உயர் அதிகரிகளின் உத்தரவு பெறப்படும். உத்தரவு கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவக்கப்படும். இதனால் புலியை பிடிக்கும் நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றது.
பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவிப்புகள் வெளியிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருறோம்.பொது மக்கள் தங்களது மாடு, ஆடுகள் உள்ளிட்ட வளர்ப்பு கால் நடைகளை வெளியிடங்களில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். புதர்கள் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் மனிதர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். புலிநடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த அறிவிப்புகள்ஒலிபெருக்கி மூலம் செய்து வருகின்றனர்.